மதுரை மாவட்டம் நகரி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி பங்களாவைச் சேர்ந்தவர் குருசாமி (27). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த திங்களன்று இரவு வேலை முடித்துவிட்டு நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மதுரை துவரிமான் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் குருசாமி தனது நண்பரோடு விழுந்தார்.
அதில் இருந்த கிடந்த கம்பி குருசாமியின் கழுத்தின் பின்பகுதியில் குத்தி முன் பகுதி வழியாக வெளியே வந்தது. ஆபத்தான நிலையிலிருந்த குருசாமி, அவரது நண்பர் இருவரையும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையின் தலைக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குருசாமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் குருசாமியின் கழுத்துப்பகுதியில் குத்திய கம்பியை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி வெளியே எடுத்தனர். தற்போது குருசாமி நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, ஓரிரு நாட்களுக்குப் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.