மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா அவனியாபுரம் பகுதியில் அதிமுக சார்பாக நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன்செல்லப்பா கலந்துகொண்டு 300 பேருக்கு கரோனா நிவாரணமாக அரிசி மற்றும் காய்கறி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உண்மை நிலவரத்தை அரசு மறைக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால், உண்மைத் தன்மையை கண்டுபிடித்து ஆதாரத்தை கூறட்டும். ஸ்டாலின் கூறுவது பொய்யான கருத்து என்பதை தற்போது அமைச்சர் காமராஜ் உறுதிபடுத்தியுள்ளார்.
கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஸ்டாலினின் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாட்டில் தினம்தோறும் 11 ஆயிரம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. அறிகுறி இருக்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அறிகுறி உள்ள பொதுமக்கள் யாரும் எங்களுக்கு கரோனா பரிசோதனை செய்யவில்லை என குற்றஞ்சாட்டவில்லை.
திமுகவை சேர்ந்த ஆர்.எஸ். பாரதிக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு பரிசோதனை செய்யவில்லை என்று நினைக்கிறேன். உடனடியாக தமிழ்நாடு அரசு ஸ்டாலினுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: ’உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை’ - அமைச்சர் காமராஜ்