பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழ்நாடு அரசு உரிய கட்டுப்பாடுகளுடன் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநில தலைவர் ராஜசேகரன் அளித்த சிறப்பு நேர்காணலில், "கரோனா தொற்று முடிவுக்கு வராத நேரத்தில் கடுமையான சோதனையான காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு மிக இனிப்பான செய்தியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
இதற்காக தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களின் பாரம்பரியம் மிக்க இந்த ஜல்லிக்கட்டு திருவிழா கடந்த ஆண்டு பாதியிலேயே நிறுத்தப்படும் சூழல் உருவானது. கரோனா பரவலால் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் வேறு எங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.
கரோனாவோடு மனித குலமே போராட வேண்டிய ஒரு சூழ்நிலையில் கட்டுப்பாடுடன் கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ள அனுமதியை முழுமனதோடு வரவேற்கிறோம்.
அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு, போட்டிகளை நடத்தப்படும் என்பதை உறுதிப்பட தெரிவிக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா தியானம் செய்ய அனுமதி