கரோனா வைரஸ் தொற்று பரவலின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், வரலாற்றிலேயே முதல்முறையாக பக்தர்கள் யாருமின்றி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மிக எளிய முறையில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருந்திருவிழா பல லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மதுரையில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொடியேற்றம் நடைபெற்று 10ஆம் நாளில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மீனாட்சி திருக்கோயிலில் நடைபெறும்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமியும், பவளக்கனிவாய்ப் பெருமாளும் காலை 6 மணிக்கு மீனாட்சி கோயிலில் எழுந்தருள்வர். முன்பாக அதிகாலை 4 மணிக்கு அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பு அய்யர், கல்யாண சுந்தர முதலியார் மண்டபகப்படிகளில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி, சித்திரை வீதிகள் சுற்றி வருவர். பிறகு முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் அம்மன், சுவாமிக்கு காலை 9.05 மணியிலிருந்து 9.29க்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாண வைபவம் சீரும் சிறப்போடும் சிவாச்சார்யார்களால் நடத்தப்படும். அச்சமயம் திருக்கல்யாண மண்டபத்தில் அமர்ந்திருக்கும் பெண்கள் புது தாலிக்கயிறு கட்டிக்கொள்வர். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சிவாச்சார்யார்கள் மட்டுமே பங்கேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நடத்துகின்றனர். பக்தர்களின் ஆத்ம திருப்திக்காக நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வு பொதுமக்களுக்கு கோயில் இணையதளம் மூலமாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும் என்று அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.சார்வரி வருடம் சித்திரைப் பெருவிழா வருகிற ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்கப்பட வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இந்நிலையில் அனைத்து பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையிலும், பக்தர்களின் ஆத்ம திருப்திக்காகவும் தலபுராணத்தின்படி, திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் அன்றாடம் நடைபெறும். நித்திய பூஜைகளுடன் சேர்த்து நாளை (மே 4, திங்கட்கிழமை) காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சந்நிதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய சேத்தி மண்டபத்தில் (உற்சவர் சந்நிதி) நான்கு சிவாச்சார்யர்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, நடத்தி வைப்பார்கள். மேற்படி நிகழ்வினை அனைத்து பக்தர்களும் கண்டு பிரார்த்திக்கும் வகையில் திருக்கோயில் இணையதளம் www.maduraimeenakshi.org திருக்கல்யாண நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாண வைபவ உற்சவத்தின்போது 'திருமாங்கல்ய மங்கல நாண்' திருமணமான பெண்கள் புதிதாக அணிந்து கொள்வதான மரபு உள்ளது. அவ்வாறு அணிந்து கொள்ள விரும்பும் தாய்மார்கள் காலை 9.05 மணி முதல் 9.29மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மங்கல நாணை மாற்றிக்கொள்ள உகந்த நேரம் எனவும் தெரிவித்துள்ளது.இதையும் படிங்க: சித்திரை திருவிழாவை 'மிஸ் செய்யும்' அனைவருக்கும் இது சமர்ப்பணம்