கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா பிரதமர், உள்துறை அமைச்சர், அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியது சர்ச்சையானது.. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
இதன் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜார்ஜ் பொன்னையா சொகுசு காரில் தப்பிக்க முயன்றபோது, மதுரை மாவட்ட காவல் துறையினர் கைது செய்து நாகர்கோவில் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, அவர் தனக்கு ஜாமீன் கோரி குழித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யபட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜார்ஜ் பொன்னையா மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "என் மீது பதியப்பட்ட வழக்கின் எப்.ஐ.ஆரின் உண்மையான நகல் இதுவரை கிடைக்கவில்லை. எனவே, எப்.ஐ.ஆர் உண்மை நகல் இல்லாமல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எப்.ஐ.ஆரின் நகல் இல்லாமல் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி மனு - சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு