சென்னை பிராட்வே பகுதியிலிருந்து சபரிமலைக்குச் சென்று மீண்டும் மதுரை நோக்கி ஐயப்ப பக்தர்கள் வேனில் வந்துகொண்டிருந்தனர். அப்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்தபோது வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் சுங்கச்சாவடி முதல் பாதையில் ஐயப்ப பக்தர்கள் வேன் சென்றுள்ளது.
இதனால் டோல்கேட் ஊழியர்கள் பாஸ்டேக் பாதையில் வந்தால் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். உடனே வேனை ஓட்டிவந்த ஓட்டுநர் கோபால், தான் மாற்றுப்பாதையில் செல்வதாகக் கூறி வண்டியை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது டோல்கேட் ஊழியர்கள் கைகளால் ஓங்கி தட்டியுள்ளனர்.
இதனால் கோபமுற்ற ஐயப்ப பக்தர்கள் டோல்கேட் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், 'ஜனவரி 15ஆம் தேதி முதல்தான் பாஸ்டேக் அமலுக்கு வருகிறது, அதற்குள் ஏன் இரு மடங்கு கட்டணம் கேட்கிறீர்கள், நீங்கள் இந்தியர்கள் தானே' என்று ஐயப்ப பக்தர்கள் கேட்க ஒரு ஊழியர், 'இல்லை, நான் பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கிறேன்' என ஐயப்ப பக்தர்களை கோபமாகப் பேசி தாக்கியுள்ளார்.
இதனால் கைகலப்பு ஏற்பட்டு டோல்கேட் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து ஐயப்ப பக்தர்களைத் தாக்கியதில் மூன்று பேருக்கு மண்டை உடைந்து காயமடைந்தார். மேலும் அவர்கள் அணிந்திருந்த மாலையையும் அறுத்தெறிந்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற பக்தர்கள் காயமடைந்த நான்கு பேரையும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு தங்கள் மீது தாக்குதல் நடத்திய டோல்கேட் ஊழியர்களை கைதுசெய்ய வேண்டும் எனக் கோரி திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட திருமங்கலம் நகர் காவல் நிலைய காவலர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட டோல்கேட் ஊழியர்கள் 4 பேரை கைதுசெய்து திருமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
பாஸ்டேக் முறையை அமல்படுத்தியது தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவரும் கப்பலூர் சுங்கச்சாவடியில் ஐயப்ப பக்தர்கள் தாக்குதலுக்கு ஆளாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மும்பை போலீசிடம் சிக்கிய தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி!