மதுரை: நாகர்கோவிலைச் சேர்ந்த சிறுமி ஃப்ரீ பயர் விளையாட்டில் ஏற்பட்ட பழக்கத்தால் நண்பர்களுடன் மாயமானார். அவரை மீட்டுத்தரக்கோரி அவரது தாயார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், கரோனா ஊரடங்கு காலம் இளம் தலைமுறைக்கு சோதனைக் காலகட்டமாகவே அமைந்தது. ஆன்லைன் வகுப்பு நடைபெற்ற போது இளம் தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்தில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கினர். தனி உலகில் வாழும் இவர்கள் நிஜவாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனர் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இந்த விளையாட்டு வந்து கொண்டேதான் இருக்கிறது. இதனை முழுமையாக தடை செய்வது இயலாத காரியமாகவே உள்ளது.
தற்போதைய சூழலில் பெற்றோர்களும், குழந்தைகளும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே இல்லை என்று கவலை தெரிவித்த நீதிபதிகள், ஃப்ரீ பயர் விளையாட்டில் உள்ள ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையைத் துண்டும் விதத்தில் உள்ளது என்று அச்சம் தெரிவித்தனர்.
தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது தான் சிறந்தது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் காணாமல் போன பெண் பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால் பெற்றோர் தனது மகளை அழைத்துச் செல்லலாம் என கூறினர். வழக்கில் தொடர்புடைய இளைஞர் பெண்ணுக்கு எவ்விதமான இடையூறும் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இத்துடன் இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க : தண்டவாளத்தில் அமர்ந்து ஃபிரீ ஃபயர் கேம்... பறிபோன மாணவன் உயிர்...