சென்னை - மதுரை இடையே தேஜஸ் விரைவு ரயில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக ஜனவரி 4ஆம் தேதி முதல் சேவை நிறுத்தம் செய்யப்பட்டது.
இதன் காரணமாக அந்த ரயிலில் உணவு வழங்கிய ஒப்பந்ததாரரின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அதனை மீண்டும் இயக்க வேண்டும் என தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
இக்குறுகிய கால இடைவெளியில் மீண்டும் ரயில் இயக்கம் தொடங்கப்பட்டதால், உரிய நடைமுறைகளுடன் உணவு வழங்குவதற்கு ஒப்பந்ததாரரை நியமிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஜனவரி 10, 11 ஆகிய இரு தேதிகளில் பயணிகளுக்கு உணவு வழங்க இயலாமல் போனது.
இதனிடையே, பயணிகள் வசதிக்காக தேஜஸ் ரயிலில் உணவு வழங்க புதிய இடைக்கால ஒப்பந்ததாரரை தென்னக ரயில்வே ஒப்பந்தம் செய்தது. இதனையடுத்து, நேற்று (ஜன.12) குடிநீர், டீ, காபி, நொறுக்கு தீனிகள், முன்னணி உணவு நிறுவனங்களின் தயார் நிலை உணவுகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இன்று முதல் தேஜஸ் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு உணவு வழங்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்!