கரோனா 3ஆம் அலை பரவலை தடுக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்து வருகிறது.குறிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்றவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், மணமக்களுக்கு மலர்களால் ஆன முகக்கவசத்தை மதுரை அம்மன் சன்னதி அருகே பூக்கடை நடத்திவரும் மோகன் தயாரித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மணமக்களைப் பொறுத்தவரை, தங்களின் திருமண நாளில் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும். அதே நேரம், அது தனியாக தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
முகூர்த்தப்பட்டுப் புடவைக்கு மேட்சிங்கான முகக்கவசம், டிசைனர் முகக்கவசம் என பலவற்றையும் நாடுகின்றனர். எனவே, அவர்களுக்கென இந்த மலர் முகக்கவசத்தை உருவாக்கும் எண்ணம் வந்தது.
முகூர்த்த நாளிலும் வழக்கமான முகக்கவசம் அணிவது போல் அல்லாமல், இது அவர்களை புத்துணர்ச்சியோடு உணர வைக்கும். இதை மூன்றடுக்கில் மல்லிகை மற்றும் வண்ணப் பூக்களை வைத்து உருவாக்கியுள்ளேன்.
மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் காணப்படும் மணமக்களுக்கு இந்த முகக்கவசம் மேலும் அழகைக் கூட்டும். இதனையும் ஒரு முறை தான் பயன்படுத்த முடியும். மணமக்களே முகக்கவசம் அணிந்திருக்கும்போது நாமும் அவசியம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அங்கு வரும் உறவினர்கள், நண்பர்களுக்கும் வரும்" என்றார்.
பூ-விலும் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்பதை மோகன் நிரூபித்துக்காட்டியுள்ளார். அவரின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'கோவாக்சின், கோவிஷீல்டு கலவை - நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது