மதுரை: வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால், வைகை ஓடி வரும் வழியிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்புடனும் இருக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் வருசநாடு, சதுரகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து, வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. கடந்த 10ஆம் தேதி நீர்மட்டம் 71 அடியை நெருங்கியதை அடுத்து திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 67.65 அடியாக இருந்த நிலையில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து நேற்று (நவ. 23) தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பாசனத்திற்காக வைகை அணையில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது வைகை ஆற்றில் இருந்து வெளியேறிக் கொண்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து, வருகின்ற 8ஆம் தேதி வரை சுமார் 2 ஆயிரத்து 466 கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தற்போது இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் மதுரை வைகை ஆற்றில் ஓடிக் கொண்டு இருக்கிறது.
இதனால், மதுரை வைகை ஆற்றில் தற்போது வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, வைகை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், தற்போது இருகரைகளையும் தொட்டு வைகையாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் காரணத்தால், வைகை ஓடி வரும் வழியிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..! கரையோர சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! போக்குவரத்திற்கு தடை..!