மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில், காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மதுரை ரயில் நிலையம் அருகே கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் 10 டன் அளவிற்கு குட்கா கடத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், வடமாநிலங்களிலிருந்து பார்சல் சர்வீஸ் லாரிகளை பயன்படுத்தி குட்காவை மதுரைக்கு கடத்தி வந்ததும், அதனை தென் மாவட்டங்கள் முழுவதும் சப்ளை செய்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று (அக்.08) இந்தக் கடத்தலுக்கு உதவியதாக இருந்த மதுரை வடக்கு மாசி வீதி, கீழ மாசி வீதி பகுதியிலுள்ள ஐந்து பார்சல் சர்வீஸ் நிறுவனங்களுக்கு மதுரை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குட்கா கடத்தல் - இருவர் கைது!