மதுரை: கோமதிபுரம் அருகே உள்ள ஆவின் நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார். இவர் நேதாஜி சாலையில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் டெல்லியைச் சேர்ந்த ஜிதேந்தர் குமார் (22) என்ற இளைஞர், கடந்த 5 மாதங்களாக உதவியாளர் மற்றும் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
ஜிதேந்தர், சஞ்சீவ்குமாரின் வங்கிப் பணப்பரிவர்த்தனை மற்றும் தொழில் விவகாரங்களை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சஞ்சீவ்குமார் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்ததை ஜிதேந்தர் நோட்டமிட்டுள்ளார். இதனையடுத்து வழக்கமாக மாலையில் தேநீர் வாங்கி வந்தபோது, அதில் மயக்க மருந்தை கலந்து சஞ்சீவ்குமாருக்கு கொடுத்துள்ளார்.
பின்னர், சிறிது நேரத்தில் சஞ்சீவ்குமார் மயக்கமடைந்த உடன், வங்கியில் இருந்து எடுத்து வைத்திருந்த 5,30,000 ரூபாய் பணத்தை ஜிதேந்தர் திருடிவிட்டு தலைமறைவானார். மயக்கம் தெளிந்த சஞ்சீவ்குமார், நடந்ததை உணர்ந்த பின்னர் தீடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சஞ்சீவ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பலே திருடன் ஜிதேந்தரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 3ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த ஆசிரியர் கைது