ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் மோர் பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி அருகே உள்ள மீனவ கிராமம் நம்புதாளை. இப்பகுதியைச் சேர்ந்த கார்மேகம், ராமநாதன், காசிநாதன், காசிலிங்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவர், வங்கதேசத்தைச் சேர்ந்த பெயர் தெரியாத மூன்று மீனவர்கள் என எட்டு பேர் ஒப்பந்த அடிப்படையில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்களாக ஓமன் நாட்டிற்குச் சென்றனர்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஒருவாரம் கழித்து கரை திரும்புவதுதான் வழக்கம். கடந்த செப்.16ஆம் தேதி ஓமன் நாட்டு மஜ்ஜிதா தீவுப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், ஒருவாரம் கடந்தும் கரை திரும்பவில்லை. பின்னர் விசாரணை மேற்கொண்டபோது, செப்டம்பர் 28ஆம் தேதியன்று ஓமன் நாட்டு கடற்கரையில் ஹிக்கா என்ற புயல் தாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து மஜ்ஜிதா தீவு கரையில் இரண்டு பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. எனவே ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான ராமநாதபுரம், குமரியைச் சேர்ந்த தமிழ்நாடு மீனவர்கள் ஐந்து பேரை போர்க்கால அடிப்படையில் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த பொதுநல மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறை செயலாளர், வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்கள் நல இணை செயலாளர், இந்தியாவுக்கான ஓமன் நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிக்கலாமே: பெங்களூரு அணியிலிருந்து ராஜஸ்தானுக்கு தாவிய பயிற்சியாளர்!