மதுரை: மதுரை ரயில்வே நிலையம் எதிரே பாரத் ஸ்டேட் வங்கிக் கிளை (SBI) அமைந்துள்ளது. இந்த வங்கி அக்கட்டடத்தின் முதல் தளத்தில் செயல்படுகிறது. தரைத்தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று (செப். 23) அதிகாலை சுமார் 3 மணியளவில் வங்கியின் உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. மேலும் வங்கியில் உள்ள எச்சரிக்கை மணியும் ஒலித்து உள்ளது. இதைப் பாா்த்த பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் பேரில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வங்கிக்குள் பரவிக் கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்டடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னா் தீயை முழுமையாக கட்டுக்குள் தீயனைப்புத் துறையினர் கொண்டு வந்தனர்.
மேலும் இந்த தீ விபத்தில் எஸ்பிஐ வங்கியில் இருந்த கணினி மற்றும் மடிக்கணினிகளும், ஆவணங்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, வங்கியில் இருந்த ஏ.சி, மரச்சாமான்கள் உள்ளிட்டவைகளும் தீக்கிரையானது. தற்போது அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன.
மின்சார வயரில் ஏற்பட்ட கசிவாக கூட தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வங்கியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் அடிப்படையில் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.
மதுரை ரயில் சந்திப்பு எதிரேயுள்ள பரபரப்ப்பான சாலையில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நள்ளிரவில் தீவிபத்து நிகழ்ந்ததால் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை எனவும், பெருமளவில் பொருட்கள் மட்டுமே சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ICC Ranking : அனைத்திலும் நம்பர்.1! கிரிக்கெட் தரவரிசையை மிரளவிடும் இந்திய வீரர்கள்