மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த காந்தி, மேலப்பசலை, உக்கிரபாண்டியன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், 'வைகை ஆற்று நீரைக் கொண்டே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராஜகம்பீரம், மேல்குடி உள்ளிட்ட 16 பெரிய கண்மாய்கள், 10 சிறிய கண்மாய்கள் மற்றும் 25 குளங்கள் மூலம் விவசாயப் பணிகள் நடக்கும் வகையில் நாட்டார் கால்வாய் அமைந்துள்ளது.
இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயம் நடைபெறுகின்றது. தற்போது வைகை அணையில் அதிகபட்ச அளவு தண்ணீர் உள்ளதால் வைகையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு பல்வேறு கண்மாய்களும் நிரம்பியுள்ளன.
மேலும் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. பல்வேறு கால்வாய்கள் நிரம்பியுள்ள நிலையில் கால்வாய்கள் அடைக்கப்பட்டு, வைகை நீர் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஒருமாதத்தில் அறுவடை செய்யும் நிலை உள்ளது.
நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும். வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீர் கடந்த 4 நாட்களாக திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டார் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், எங்கள் பகுதி பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி, மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து 16 கிராமங்கள் பயனடையும் வகையில் நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'வைகை அணையின் கெள்ளளவில் 52 அடி நீர் மட்டுமே உள்ளது. மேலும் ராமநாதபுரம் பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. எனவே, மனுதாரர் குறிப்பிடும் பகுதிக்கு தண்ணீர் வழங்குவதற்கு போதிய நீர் இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், 'வைகை அணையிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை 16 கிராம மக்கள் பயன்படும் வகையில் தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளலாமே.? இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது' என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், ’வைகை அணையின் மொத்த கொள்ளளவு எவ்வளவு? பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு எவ்வளவு தண்ணீர் அனுப்பப்படுகிறது.? ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விட்டது போக மீதம் தண்ணீரின் அளவு மற்றும் எவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறது. மேலும் அணையில் மீதம் தண்ணீர் இருக்கும்பட்சத்தில் மனுதாரர் குறிப்பிடும் பகுதிகளுக்கு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா?’ ஆகியன குறித்து சம்பந்தப்பட்ட துறைச் செயலாளரிடம் ஆலோசனை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.