மதுரை திருப்பாலையில் வசித்து வருபவர் சுப்புராஜ் (வயது 40). இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 37), மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமி திருச்சி ரயில்வே காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும், இதன் காரணமாக ஜெயலட்சுமி கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (செப். 22) இரவு மதுரை அடுத்த தேனூர் கட்டப்புளி கருப்பசாமி கோயில் அருகே உள்ள தண்டவாளத்தில் தனது இரு குழந்தைகளுடன் மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்தார். ரயில் மோதிய வேகத்தில் மூன்று பேரின் உடல்களும் துண்டு துண்டாக சிதறின.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் இறந்த மூன்று பேரின் உடல்களைக் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் கோவில்பட்டியைச் சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் (வயது 50) என்பவருக்கும் ஜெயலட்சுமிக்கும் கடந்த ஆறு ஆண்டுகளாக தகாத உறவு இருப்பதாகவும், இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்த விவகாரம் ஜெயலட்சுமியின் கணவர் சுப்புராஜிக்கு தெரியவந்த நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதேபோல் தலைமைக் காவலர் சொக்கலிங்க பாண்டியனுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவரது மனைவியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மிக நெருக்கமாக ஜெயலட்சுமியுடனான தனது உறவை சொக்கலிங்க பாண்டியன் வளர்த்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் பாண்டியன், தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டடார். பாண்டியன் செங்கோட்டையிலும், ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் அடிக்கடி இருவரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் பாண்டியன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அறிந்த ஜெயலட்சுமி, பாண்டியனோடு கடும் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (செப். 20) மதுரையில் உள்ள ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்த சொக்கலிங்க பாண்டியன், அங்கே அவரிடம் கடும் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் சூழல் வரை சென்றதாகவும், அண்டை வீட்டைச் சேர்ந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கும் சொக்கலிங்க பாண்டியனுக்கும் உள்ள தொடர்பு ஊரறிய தெரிந்து விட்ட நிலையில், அவமானம் தாங்காமல் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஜெயலட்சுமி ரயில் முன் பாய்ந்ததாக தகவல் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஜெயலட்சுமி குழந்தைகளோடு ரயில் முன் பாய்ந்த தகவலை அறிந்த சொக்கலிங்க பாண்டியன் போலீஸ் விசாரணைக்குப் பயந்து இன்று (செப். 21) அதிகாலை கோவில்பட்டியில் இருந்து கார் மூலமாக வந்து சாத்தூர் அருகே சின்னக்கோவில்பட்டி என்ற பகுதியில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பாகப் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவரது உடலை மீட்டு தூத்துக்குடி ரயில்வே போலீசார் உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு சம்பவங்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்த கும்பல் கைது - தருமபுரியில் பயங்கரம்!