மதுரை அண்ணாநகரில் தன்னுடைய சொந்த முயற்சியின் மூலமாக ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, கரோனா பாதிப்பு காலத்திலும் சிறப்பான முறையில் பொருளீட்டி வருகிறார் பட்டதாரி இளம்பெண் விஜயலட்சுமி.
இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் விஜயலட்சுமி பேசுகையில், "நான் ஒரு எம்பிஏ பட்டதாரி. படித்து முடித்ததும் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தது. ஆனால் சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலையை உதறிவிட்டு ஆடை வடிவமைப்பு துறையை தேர்வு செய்தேன்.
தொடக்கத்தில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் மிக கடினமாக இருந்தது. பிறகு என்னுடைய நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் மூலமாக எனது ஆடை வடிவமைப்பை கொண்டு செல்ல ஆரம்பித்தேன். அப்போது எனக்கு ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது கரோனா பாதிப்பு காலத்திலும், வித்தியாசமான ஆடை வடிவங்களை இணையத்தின் மூலமாக பதிவேற்றம் செய்து வருகிறேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.
தற்போது என்னுடைய இந்த ஆடை வடிவமைப்புத் தொழில் மிக வெற்றிகரமானதாக மாறியுள்ளது. என்னைப் பார்த்து நிறைய பெண்கள் இந்தத் துறைக்கு வரத் தொடங்கியுள்ளனர். தற்போது பெண்கள் பெருமளவில் முதலீடு செய்ய சிக்கலாக உள்ளது. ஆகையால் அரசு தலையிட்டு ஊக்கம் அளிக்க வேண்டும். மேலும் முதலீட்டைப் பெறுவதற்கான நடைமுறைகளையும் எளிமையாக்க வேண்டும்" என்றார்.
ஆடை வடிவமைப்புத் துறையில் பயிற்றுநராக இருக்கும் குபேந்திர ராஜன் தெரிவிக்கையில், "ஆடை வடிவமைப்பு என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் தேவையான ஒரு கல்வி. விஜயலட்சுமி போன்ற நிறைய வல்லுநர்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆடை வடிவமைப்பு துறையை பொறுத்தவரை வேலை வாய்ப்பை விட தொழில் வாய்ப்பு அதிகம் உள்ள ஒரு துறையாகும். இணையவழி வர்த்தகத்தில் முக்கியமான தொழிலாக ஆடை வடிவமைப்புத் துறை மாறியுள்ளது. தற்போதுள்ள சூழலில் இந்த வாய்ப்பை பெண்கள், குறிப்பாக மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய அணிக்காக ஆட வேண்டும்... ஆனால், பயிற்சி செய்ய மைதானம் இல்லை...!