மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தமிழ்நேசம் நுகர்வோர் சங்கம் என்ற பெயரில் போலியான அமைப்பு ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இவர் திருப்பரங்குன்றம், திருமங்கலம் வட்டாரப் பகுதிகளிலுள்ள உணவகங்களுக்குச் சென்று தன்னை உணவுப்பொருள் அலுவலர் எனக் கூறியுள்ளார்.
மேலும், உணவகங்களில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து உணவகங்களுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, உணவகங்களின் உரிமையாளர்களிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பதற்கு மாதம் மாதம் பணம் கொடுக்குமாறு மிரட்டி வந்துள்ளார்.
மிரட்டிய போலி ஆசாமி
இந்நிலையில் அண்மையில் ஒரு டீக்கடை உரிமையாளரிடம் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் விற்பதாக, தனக்கு ஆதாரத்துடன் தகவல் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் சோதனைக்கு வந்துள்ளதாகவும் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கினால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாகவும் இந்த போலி ஆசாமி மிரட்டியுள்ளார்.
மேலும், பணம் தர மறுக்கும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிப்பதாகவும்; மிரட்டி ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுள்ளார். இது குறித்து வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்தநிலையில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் வேலுவாசகம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்தப்புகாரில் பெருமாள் மீது ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்பம், கருகலைப்பு, தற்கொலை... சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்...