தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்த காவல்துறையினர், என்னை பெரியகுளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு தாமரைக்குளம் முன்னாள் துணை சேர்மன் ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்த சந்தோஷம் என்பவர், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளதாக தெரிவித்தனர்.
தாமரைக்குளம் முன்னாள் துணை சேர்மனுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டது. என்னை கழிவறையில் வைத்தும் லத்தியால் தாக்கி, சங்கிலியில் கட்டி வைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். கால், முதுகு, நெஞ்சு, பிட்டம் என உடம்பில் அனைத்து இடங்களிலும் தாக்கினார்கள். சந்தோஷம் என்னை பழிவாங்கும் எண்ணத்தில் என்மீது பொய் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தன்னோடு சேர்ந்து மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து பெரியகுளம் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது என்னை காவல்துறை தாக்கியதில் காலில் ரத்தம் வருவதாக நீதிபதியிடம் தெரிவித்தேன். உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கூறினார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையளித்த பின் திண்டுக்கல் சிறைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் ஜூன் மாதம் 2ஆம் தேதி பிணையில் வெளியே வந்தேன். காவல்துறை தாக்கியதில், எனக்கு உடல்நிலை சரியில்லை. என் மீது அளிக்கப்பட்ட பொய் புகார் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு, என்னை தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய இழப்பீடு வழங்கி, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நீதிபதி பொங்கியப்பன் முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் திருப்பதி அர்ச்சகர்கள் இருவர் அடுத்தடுத்து கரோனாவால் உயிரிழப்பு!