மதுரை: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திற்கு உள்ளேயே இந்த நிகழ்வு நடைபெற்றுமது.
இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. ஆழ்வார்புரத்தில் உள்ள வைகை ஆற்றங்கரை ஓரம் கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக மேடை அமைக்கும் பணி நடைபெறும்.
மதுரை கள்ளழகர் கோயில் துணை ஆணையாளர் அனிதா தலைமையிலான குழுவினர், மதுரை மாநகராட்சி நகர பொறியாளர், அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தற்போது வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதால் மிக எளிதாக எந்த வித இடர்பாடும் இன்றி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் தற்காலிக பாதையை அமைப்பதால் மாநகராட்சிக்கு லட்சக்கணக்கில் செலவு வருவதையொட்டி காங்கிரீட் பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் வழங்குவதற்காக மதுரையை நோக்கி வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பிறகு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கிறார் என்பது ஐதீகம். ஏப்ரல் 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.
இதையும் படிங்க: ஆதிபிரம்மோற்சவம் - நம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் எழுந்தருளினார்