மதுரை அருகே உள்ள அரசுப்பள்ளியைச் சார்ந்த தலைமையாசிரியர், தனக்கு வேண்டாத ஆசிரியர்கள் குறித்து அப்பள்ளி மாணவிகள் புகார் அளித்ததைப் போன்று சைல்டு லைனுக்கு (Child help line) தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தப் புகாரைப் பதிவு செய்த காவல்துறை, விசாரணை மேற்கொண்டது.
பாதிக்கப்பட்ட அப்பள்ளியைச் சேர்ந்த பெண் ஆசிரியர் தென் மண்டல காவல்துறை தலைவரிடம் சென்று இந்தப் புகார் பொய்யானது என விளக்கம் அளித்த நிலையில், தனிக்குழு அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், தலைமையாசிரியரின் புகார் பொய்யானது என்பதும், ஆசிரியர்களைப் பழி வாங்க மேற்கொண்ட செயல் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் தற்போது போக்சோ சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், போக்சோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டங்கள் சிதைக்கப்படுகிறது: இச்சம்பவம் பள்ளி ஆசிரியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பாக குழந்தைகள், பெண்கள், நீதித்துறை சார்ந்து இயங்கும் வல்லுநர்களிடம் கேட்டபோது, அவர்கள் பல்வேறு கோணங்களில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
குழந்தைகள் உளவியல் வல்லுநர் முனைவர் ராணி சக்கரவர்த்தி கூறுகையில், “குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிட்டு உருவாக்கப்பட்ட சட்டங்களில் மிக முக்கியமானது போக்சோ (Pocso Act). அச்சட்டம் தற்போது சுயநோக்கத்திற்காக, விருப்பு வெறுப்பின் அடிப்படையில், பழிவாங்கும் எண்ணத்தோடு தவறாகக் கையாளப்படும் சூழல் அதிகரித்து வருகிறது.
மதுரையிலுள்ள பள்ளி தலைமையாசிரியரின் இந்தச் செயல்பாடும்கூட பாலியல் வன்கொடுமையை சேர்ந்ததாகவே நான் கருதுகிறேன். தங்களின் பழி தீர்க்கும் செயலுக்கு குழந்தைகளை பகடைக் காயாகப் பயன்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற செயல்கள் காரணமாக நிஜமாகப் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் நியாயங்களின் உண்மைத்தன்மையும் கேள்விக்குறியாகிவிடும் அபாயம் உள்ளது. அதற்கு இந்த சம்பவம் ஒரு முன்னுதாரணமாக மாறிவிடுமோ என்ற பயமும் எங்களைப் போன்ற செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளின் முகத்தை காட்டக்கூடாது என்பது மட்டுமன்றி பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டத்தின் நல்ல நோக்கத்தை இவர்கள் சிதைக்கிறார்கள். தற்போதுள்ள ஆய்வின் அடிப்படையில் போக்சோ நிகழ்வுகளில் 20லிருந்து 25 விழுக்காடு சம்பவங்களே வெளியே தெரிகின்றன. அந்த வாய்ப்பையும் இது போன்ற தவறான புகார்கள் கெடுத்துவிடும். இந்த நபர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
இரும்புக்கரம் வேண்டும்: பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்ற நபர்களின் உளவியலைக் கணிக்கும்போது, பாலியல் குறைபாடு, உளவியல் குறை, மன நோய் என அவர்களுக்கான காரணிகளை வகைப்படுத்தலாம். ஆனால், மற்றவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள படித்த நபர்கள் பழிவாங்கும் எண்ணத்தில் இதுபோன்று இயங்குவது மிக மிக ஆபத்தான போக்கு. போக்சோவில் வழங்கப்படும் அதே தண்டனை இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள குழந்தைகள் பிடிவாதப் போக்கு, பழி வாங்கும் எண்ணம் கொண்ட இயல்பினராக உருவாகி வருகின்றனர். இதற்கு பல்வேறு புறக்காரணிகள் மட்டுமன்றி அகக்காரணிகளும் உள்ளன. அவர்களும் மிரட்டுவதற்கு இதுபோன்ற சட்டங்களைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது. இதுபோன்ற நல்ல சட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் நிலை உருவானால், கடைசியாக 'புலி வருது... புலி வருது...' கதையாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது.
சாதி வன்கொடுமை சட்டம், வரதட்சணைக் கொடுமை சட்டங்களைப் போன்று போக்சோவும் தவறாகப் பயன்படுத்தப்படும் சூழலை உடனடியாகக் களைய வேண்டியது அரசின் முக்கியக் கடமை. பலவீனமான பாலினராக இருக்கக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான இதுபோன்ற சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்றார்.
போக்சோ பதிவுகள்: மதுரை நகரில் மட்டும் கடந்த மே மாதம் வரை 33 கற்பழிப்பு வழக்குகள் போக்சோவில் பதிவாகியுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டு 52, 2021-ஆம் ஆண்டு 100 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் மதுரை மாவட்டத்தில் மே மாதம் வரை 38 வழக்குகளும்; 2020-ல் 80, 2021-ல் 92 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
கற்பழிப்பு அல்லாத பிற போக்சோ வழக்குகளைப் பொறுத்தவரை கடந்த மே மாதம் வரை 10 வழக்குகளும், 2020-ல் 29, 2021-ல் 20 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் மதுரை மாவட்டத்தில் கடந்த மே மாதம் வரை 20 வழக்குகளும், 2020-ல் 51, 2021-ல் 27 வழக்குகளும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமுறையை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்: சோகோ அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வழக்குரைஞர் செல்வகோமதி கூறுகையில், "மனித உரிமை ஆர்வலர்களும், குழந்தைகள் மற்றும் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்கள், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இணைந்து போராடிப் பெற்றதே போக்சோ சட்டம் (Pocso Act).
இந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக்கூடிய செயல்பாடுகள் அதிகரித்திருப்பது வேதனைக்குரியது. இந்த வழக்கை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பிற போக்சோ வழக்குகளையும் சந்தேகக்கண் கொண்டு காவல்துறையினர் பார்க்கும் நிலை உருவாகிவிடக்கூடாது.
இந்த சட்டத்தை அழுத்தமாக ஆணித்தரமாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல்துறைக்கு மட்டுமன்றி, பெற்றோர்கள், ஊடகங்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் உள்ளது. இதுபோன்ற வழக்குகள் வரும்போது குழந்தைகள் உரிமை என்ற அடிப்படையிலிருந்துதான் அணுக வேண்டும். தலைமுறையை உருவாக்குபவர்கள் பொறுப்புள்ள ஆசிரியர்கள்” என்றார்.
ஆணையம் அமைக்க வேண்டும்: அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் சுலைஹா பானு தொலைபேசி வழியாக பேசுகையில், “அதிகார பலம் கொண்டு ஆசிரியர்களை மிகத் தவறாக வழிநடத்தும் நிலை பல பள்ளிகளில் உள்ளது. இதில் பெரிதும் பாதிக்கப்படுவோர் பெண் ஆசிரியர்களாக உள்ளனர்.
ஆகையால் தமிழ்நாடு அரசு தரப்பில் கால நிர்ணயம் செய்து தகுந்த குழுவின் வாயிலாக குறைதீர் ஆணையம் அமைத்து இதனை நிவர்த்தி செய்ய முன் வர வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்களுக்கிடையே உள்ள விரோதப் போக்குகள் குறைந்து, அச்சமின்றி பணியாற்றும் நிலை ஏற்படும்” என்றார்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் சட்டங்கள் சமூக இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாகும். ஆனால், அதை தங்களுக்கு ஏற்றாற்போன்று வளைக்கும் புல்லுருவிகளால், அச்சட்டங்களின் உறுதித்தன்மையில் தொய்வு ஏற்படக்கூடும் என்பதை மனதிற் கொண்டு தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே இதனைக் களைய முற்பட வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்து.
இதையும் படிங்க: ஆபத்தான நாட்டு வெடிகளைத் தவிர்ப்பீர் - மருத்துவர் எச்சரிக்கை..!