மதுரை : திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை காவல்துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்ட்டது. பின்னர் கடந்த மாதம் 20ஆம் தேதி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, இரண்டு நாட்கள் போலீஸ் காவல் விசாரணைக்கு அனுமதி அளித்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மணிகண்டன் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டார். எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் வைத்து அடையாறு தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் முக்கிய ஆவணமாக கருதப்படும் மணிகண்டனின் செல்பேசி மதுரை கேகே நகரில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாகவும், அதில் நடிகையின் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் உள்ளதாகவும் போலீஸ் கருதுகிறது. எனவே அந்த ஆதாரங்களை கைப்பற்றுவதற்காக மணிகண்டன் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : பேராசிரியர் மீது பாலியல் புகார்: சமூக நலத்துறை விசாரணை!