மதுரை: கடன் தொல்லையால் முன்னாள் ரானுவ வீரர் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை, சர்வேயர் காலனி அருகே உள்ள ஆவின் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இந்திய ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். இவரது மனைவி விசாலினி (வயது 36). இவர்களுக்கு ரமிஷா (வயது 10) என்ற மகள் உள்ளார். இவர்கள் கடந்த 5 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ரமேஷ் ராணுவத்தில் இருந்து விருப்பு ஓய்வு பெற்ற பின் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரமேஷ் குடியிருந்த வீட்டின் கதவு கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சர்வேயர் காலனி காவல் துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பாலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: மனைவியை வீட்டுக்கு அனுப்பாததால் சின்ன மாமனாரை கொலை செய்த மருமகன் கைது!
இதையடுத்து, போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரமேஷ், அவரது மனைவி, மகள் ஆகிய மூவரும் குடும்பத்துடன் சடலமாக கிடந்து உள்ளனர். பின்னர், உடனடியாக காவல் துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும், அதில் நஷ்டம் ஏற்பட்டு அதிக கடன் பெற்ற காரணத்தால் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
இருப்பினும், வேறு காரணங்கள் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் மதுரை சர்வேயர் காலனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ம,பி-யில் பாலியல் வன்புணர்வு; அரை நிர்வாண நிலையில் உதவி கோரிய சிறுமி!