மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், "வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பினோம். ஆனால் அதற்கு கருத்தரித்தல் மைய மருத்துவர்கள் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறுகின்றனர். எனவே, இது தொடர்பாக அரசின் மருத்துவ வாரிய சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி சுவாமி நாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, "எப்போதும் சாத்தியமற்றது என்று தோன்றுவதை அடைய முயற்சிக்கிறது மனித புத்திசாலித்தனம். பாரம்பரிய திருமணத்தின் பொருள் இனப்பெருக்கம். உயிரியல் காரணங்களால் குழந்தை பிறக்க முடியாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு நவீன விஞ்ஞானம் உதவியுள்ளது. இது உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது.
கால சூழல் காரணமாக, IVF மையங்கள் காளான்களாக உருவெடுத்து உள்ளன. இவை நெறியற்ற முறையில் பரவி வருவதும் ஒரு உண்மை. இத்தகைய மையங்கள் காளான்கள் போல் பெருகுவதால் ஏற்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை நாடாளுமன்றம் நடைமுறை படுத்தியது. உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம் 2021, மற்றும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021 ஆகிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்தச் சட்டங்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க விரும்பும் தம்பதிகள் தங்கள் குழந்தையைப் பெற்றெடுக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய தொடர் நடைமுறைகளை விளக்குகிறது.வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள வயது மற்றும் பிற நிபந்தனைகளை தம்பதியினர் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த சட்டத்தின் பிரிவு குறித்து உச்சநீதிமன்றத்தில் விவாதத்தில் இருந்த போதே , பிரபல தம்பதிகள் குறிப்பாக சூப்பர் பிரபலங்கள் வாடகைத் தாய் சட்டங்கள் மற்றும் அதன் சிக்கலான நடைமுறைகள் மூலம் குழந்தை பெற்றனர். ஏனெனில் வாடகை தாய் சட்டத்தின் படி , சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தெரியவில்லை.
இந்தச் சட்டத்தின்படி, மத்திய அரசும், மாநில அரசுகளும் தேசிய வாடகைத் தாய் வாரியம் மற்றும் மாநில வாடகைத் தாய் வாரியங்களை சட்டம் இயற்றப்பட்ட 90 நாட்களுக்குள் அமைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அத்தகைய வாரியம் செயல்படுகிறதா? என்பது குறித்து தெளிவு இல்லை. அதைவிட முக்கியமானது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மருத்துவ வாரியம் அமைப்பதுதான்.
இந்த வாரியம் தான் வாடகை தாய் தொடர்பாக / தகுதிச் சான்றிதழை வழங்கும். மாவட்டத்தின் தலைமை மகப்பேறு மருத்துவர் அல்லது மகப்பேறு மருத்துவர் மற்றும் தலைமை குழந்தை மருத்துவர் என குறைந்தது இரண்டு நிபுணர்களை உள்ளடக்கியதாகும். இத்தகைய மாவட்ட வாரியங்கள் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வாடகை தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதியரில், தாய் 23-50 வயது மற்றும் தந்தைக்கு 26-55 வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுகிறது.
எனவே, வாடகை தாய் சட்டப்படி வாடகை தொடர்பான சான்றிதழ்களை பெறுவதற்கு மாவட்டம் வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க வேண்டும். விண்ணப்பங்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் அவர்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாடகை தாய் சட்டங்கள் குறித்து நீதித்துறை அதிகாரிகளுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் வகையில் மாநில நீதித்துறை அகாடமி, விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்த வேண்டும். மனுதாரரின் மனுவை வாரியம் பரிசீலிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் அதிரடி கைது!