மதுரை: சிவகங்கை மாவட்டம் மலைக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ அருள்மிகு சாந்தி வீரன் கோயில் திருவிழா அமைதியான முறையில் நடைபெறுவதற்கு இடையூறாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாலசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (ஜூலை 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "ஸ்ரீ சாந்தி வீரன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாதம் கொண்டாடப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளாக கிராமத்தின் கோயில் திருவிழாக்கள் இணை ஆணையரின் உத்தரவின்படி யாருக்கும் முன்னுரிமை வழங்காமல் அனைவரும் சமமாக திருவிழா நடைபெறுகிறது.
ஆனால் ஜெயபால் உள்ளிட்ட சிலர் திருவிழாவில் அமைதியை கெடுக்கும் வகையிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் தனக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறி பிரச்சனை எழுப்பி வருகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.
நிர்வாக அலுவலர் தரப்பில், " கோயில் திருவிழாக்களில் யாருக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை" என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, "மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. எனவே சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் ஜூலை 3 அன்று நடைபெறும் திருவிழாவில் கோயிலுக்குள் யாருக்கும் தலைப்பாகை, குடை பிடித்து வருவது போன்றும், மற்ற முதன்மைப்படுத்துவது போன்ற ஆடைகளும் அணிந்து வர அனுமதிக்க கூடாது.
அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் கோயிலுக்குள் சமமாக நடத்தப்பட வேண்டும். இதனை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: ராமர் கோயில் கட்ட ஒரே மாதத்தில் பல கோடி நன்கொடை வசூல்: எவ்வளவு தொகை தெரியுமா?