மதுரை அம்மன் சன்னதி பகுதியில் மதுரை மாநகராட்சி சார்பாக ''மதுரையை பசுமையாக்குவோம்'' என்ற தலைப்பின் கீழ் கோலப்போட்டி நடைபெற்றது. இந்த கோலப்போட்டியில் பங்கேற்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுப்பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சுகாதாரமான நகரமாக மதுரை சிறக்க வேண்டும். அதற்கு எல்லோரும் விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்துள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியை தனியார் அமைப்பு நடத்தியுள்ளது.
முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தால் 40 ஆண்டுகளுக்கு பிறகு வண்டியூர் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. வைகை ஆற்றில் இருந்து இரண்டு கிலோமீட்டர் வாய்க்கால் தூர்வாரப்பட்டு, தொடர்ந்து நீரை சேகரிப்பதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தெப்பக்குளம் கொண்ட மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் 15 அடி உயரத்திற்கு நீர் உயர்ந்து அற்புதமாக காட்சியளிக்கிறது. தெப்பத்திருவிழாவை வெகு விமரிசையாகக் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலர்களின் பணியே இதற்கு முழுமையான காரணம்.
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து இந்த ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. மேலும் உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேண்டும் என்று அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் அந்த விழா சிறப்பாக நடைபெறும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: மதுரையில் ஜல்லிக்கட்டுத் திருவிழா - மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் ரெடி