மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனத்திற்காக இன்று காலை அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வந்தார். இவ்வாறு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அதிமுக மாநாடு வெற்றி பெற்றதற்காக சிறப்பு பூஜைகள் செய்து விசேஷ வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் அவருக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டு நாள் ஆய்வுப் பணிக்காக கனிமொழி எம்பி தலைமையில் மதுரைக்கு வந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு செய்தனர்.
அப்போது கோயிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் தரப்பினரும் சாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரம் அருகே ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து விமான நிலையம் நோக்கி புறப்பட்டார். அதன் பின்னர் வந்த கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கோயிலில் இருந்து புறப்பட்டபோது, கோயிலுக்கு வெளியே இருந்த வளையல் கடை ஒன்றில் ஆய்வுக்கு உடன் வந்த சக பெண் எம்பி கீதாபென் வஜேசிங்பாய் ரத்வாக்கு வளையல்களையும், சாமி படத்தையும், தாழம்பூ, குங்குமம் வாங்கி பரிசளித்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஒருவரின் குழந்தைக்கு ‘ஆதன்’ என்ற பெயர் சூட்டினார். மேலும், கோயிலுக்கு வந்த பெண்கள் பலரும் கனிமொழியுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் ஏராளமான தொண்டர்கள் அதிகாலை முதலே திரண்டதால் அந்த பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க:"ஏய் நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா?" - ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டும் பெண் காவல் ஆய்வாளர்!