மதுரை மாவட்டம் சின்ன சொக்கிகுளத்தில் மதுரை மண்டல தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை, கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் அரசு சார்ந்த ஒப்பந்த நிறுவனங்கள், கட்டுமானங்கள் உள்ளிட்டவைக்கு அனுமதி சான்றிதழ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இங்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கப்படுவதாக சிபிஐ அலுவலர்களுக்கு புகார் வந்துள்ளது. புகாரின் பேரில், ஊழல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், கோவை தனியார் நிறுவனத்தை சேர்ந்த முரளி, அலுவலக ஆணையர் சிவ ராஜனுக்கு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர். இருவரையும் கைது செய்த சிபிஐ, சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ஆணையர் சிவ ராஜன், நிறுவனத்திற்கு ஏற்றார்போல் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று சொத்துக்களை குவித்துள்ளது தெரியவந்துள்ளது. அவருடைய வீட்டிலும் சிபிஐ அலுவலர்கள், அதிரடியாக சோதனை நடத்தி பல்வேறு சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆணையர் சிவராஜன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர். சிவராஜன் குவித்த சொத்துக்கள் குறித்து சிபிஐ அலுவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.