மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் வன ஆர்வலராக உள்ளேன். 485 சதுர கிலோ மீட்டர் மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுவட்டாரப் பகுதிகளைக் கொண்டது விருதுநகர் மாவட்டம். இந்தப் பகுதியில் கடந்த 2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 152 யானைகள் இப்பகுதியில் உள்ளதாகக் கண்டறியப்பட்டது .
பெரும்பாலும் யானைகள் வன வளங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால் சில கொடியவர்கள் தந்தம் போன்றவற்றுக்காக யானைகளைக் கொடூரமான முறையில் கொன்றுவருகின்றனர்.
2018ஆம் ஆண்டு மட்டும் 84 யானைகள் இறந்துள்ளதாகவும், இந்தாண்டில் இதுவரை 61 யானைகள் இறந்துள்ளதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளால், யானை என்ற இனமே அழியும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், கடந்த மே மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த சாப்டூர் வனப்பகுதியில் ஒரு யானை கொடூரமான முறையில் கொன்று எரிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்களை மறைத்து அப்பகுதி வனத்துறையினர், காட்டுப் பகுதியிலேயே இறந்த யானையின் சடலத்தைப் புதைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானதையடுத்து, எட்டு வனத்துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வனங்களைப் பாதுகாக்கும் யானைகளை அழிக்கும் செயலில் ஈடுபடும் கொலைகாரர்களைக் கண்டறிந்து மத்திய வனக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும்.
இந்த வழக்கை தெற்கு மண்டல வன உயிரின குற்ற தடுப்பு அமைப்பு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இறந்த யானையின் உடல் பாகங்கள், எலும்புகள் பரிசோதனைக்காக சென்னை, ஹைதராபாத் ஆகிய ஆய்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
எட்டு வனத்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணைக்காக மூன்று உயர் அலுவலர்கள் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதனைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.