தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு அறிவித்த தின ஊதியம் ரூ. 380-ஐ உடனடியாக வழங்க வேண்டும், அரசு நியமித்த கேங்மேன் பதவியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மதுரை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஒரு வாரமாக போராட்டம் செய்து வருகின்றனர். இதையடுத்து எட்டாவது நாளான இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் கூறும்போது, 'நாங்கள் 12 வருடங்களுக்கு மேலாக மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். தமிழ்நாடு அரசு எங்களுக்கு தின ஊதியமாக ரூ. 380-ஐ அறிவித்தது. ஆனால் இன்னும் எங்களுக்கு முறையாக அந்த பணம் வழங்கப்படவில்லை' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'ஒப்பந்த தொழிலாளர்களாகிய எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தமிழக அரசு நியமித்த கேங் மேன் பதவியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக குடும்பத்துடன் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம்' என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின்வாரிய அலுவலர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் அளித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்!