மதுரை, சோழவந்தான் அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் மகன் சுரேஷ் (29). இவர் தேசிய அனுமதி பெற்ற லாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை சுரேஷ் வீட்டை விட்டு வெளியே வந்த போது, பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்கள், சுரேஷின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.
இந்தக் கொலை குறித்து சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் மோகன்குமார், சோழவந்தான் காவல் துறை ஆய்வாளர் ராஜா, துணை ஆய்வாளர் ரவி உள்பட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.
இதில், முன்விரோதம் காரணமாக சுரேஷ் கொலை செய்ததாக ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுரேஷை வயல்வெளியில் கொலையுண்டதைப் பார்த்து அவருடைய தாயும், சகோதரர்கள், உறவினர்கள், கொலை செய்தவர்களைக் கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கக் கூடாது என்று காவல் துறையினரைத் தடுத்தனர்.
கொலை செய்தவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக துணை கண்காணிப்பாளர் மோகன் குமார் உறுதி அளித்தார். இதையடுத்து, சுரேஷ் குமாரின் உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.