மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சௌராஷ்டிரா ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஏழை, எளிய மக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதை உடனுக்குடன் சரிசெய்து வருகிறோம். இதுகுறித்து எங்கள் கவனத்திற்கு யார் கொண்டு வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதைய கரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு நன்மை செய்ய முன்வருவோர் அனைவரையும் வரவேற்கிறோம். நடிகர் கமல் தன்னார்வப் பணிகளை மேற்கொண்டால், அதில் ஒன்றும் தவறில்லை. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அரசைக் குறை செல்வதற்காகவே, ஏதேனும் புதிய புதிய குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் கரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சக சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேரடியாகச் சென்று நலம் விசாரித்துள்ளார். அதேபோன்று இந்த விவகாரத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மிகக் கருணையோடு நடந்து கொள்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
எங்களைப் பொறுத்தவரை சட்டப்பேரவையில் திமுக உறுப்பினராக அதிமுக அரசை ஜெ. அன்பழகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால், அவரை திராவிட இயக்கத்தின் சொத்து என்ற அடிப்படையிலேயே பார்க்கிறோம். திராவிட இயக்கத்தின் பெரும் தலைவர்கள் எல்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்களது முதன்மையான நோக்கம்" என்றார்.