மதுரை கிழக்குத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி, பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியனை தாக்க முற்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் தலைமையில் சில வழக்கறிஞர்களும் திமுக மூர்த்தி சார்பாக சில வழக்கறிஞர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனித்தனியாக புகார் மனு அளித்தனர்.
திமுக தரப்பு வழக்கறிஞர் அளித்த மனுவில் , "கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மூர்த்தி கரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கி வருகிறார். அதனால் அவருடைய செல்வாக்கு உயர்வதை கண்டு பாஜகவினர் பொய் பரப்புரையில் ஈடுபடுகின்றனர். அதுதொடர்பாக சங்கரபாண்டியன் வீட்டில் சென்று விசாரித்தனர். திமுக எம்எல்ஏ மூர்த்தியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சங்கரபாண்டியன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் தரப்பு வழக்கறிஞர் அளித்த மனுவில், "பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர், பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் வீட்டிற்குச் சென்று அவரையும், அவரது மனைவியையும் தாக்க முயன்றுள்ளனர். மேலும், துப்பாக்கியைக் காட்டியும் மிரட்டியுள்ளனர்.எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற திமுக எம்எல்ஏ: 'சிசிடிவி' காட்சி வைரல்!