மதுரை: திருநெல்வேலி மாவட்டதை சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடந்த 2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்து இருந்தனர். அதில் "கடந்த 2018 ம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய ராணுவம் வெளியிட்ட ராணுவ வீரர் பணியிடத்திற்கான அறிவிப்பில் விண்ணப்பித்து, அனைத்து தகுதி தேர்விலும் கலந்து கொண்டு உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றோம்.
இதை தொடர்ந்து 2018 ஜூலை 29ஆம் தேதி வெளியிட்ட தேர்வு முடிவில் 22 வீரர் பெயர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அதில் எங்களது பெயர் இடம் பெறவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, காலி இடங்கள் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் இந்திய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பாணையில் இந்த பதவிக்கு எத்தனை பேர் தேவை, எத்தனை பேர் தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இது சட்டவிரோதம். எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு, விதிகளை பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு ராணுவ வீரர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று" அந்த மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கில் மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர், முதன்மை ராணுவ அதிகாரி உள்ளிட்டோர் பதிலளித்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உயிருக்கே உலை வைக்கும் ரூம் ஸ்ப்ரே மற்றும் ஏர் ஃப்ரஷ்னர்கள்.. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?