திருச்சியைச் சேர்ந்த அசோகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டில் இந்தாண்டு கரோனா நோய்த்தொற்று காரணமாக செப்டம்பர் முதலாம் வாரத்தில் ஜே.இ.இ. தேர்வும், செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வும் நடைபெற உள்ளது. ஆனால் அதன் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலர் தேசிய அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்குச் செல்வதால், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில் பெற்ற இடங்கள் காலியிடங்களாகும்.
அந்தக் காலியிடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என்பது தொடர்பாக அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆகவே அந்தக் காலியிடங்களை நிரப்புவது குறித்து உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்கவும், அதுவரை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்காக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, ஒவ்வொரு ஆண்டுமே, மாணவர் விரும்பும் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கையில், காலிப்பணியிடங்கள் ஏற்படுவது இயல்பு. இவற்றை அரசு எவ்வாறு கையாளுகிறது எனத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கோரி மனுதாரர் அறிந்துகொள்ளலாம். தேவைப்படும்பட்சத்தில் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அணுக வாய்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.