தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், "தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேகமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொம்மராஜபுரம் கிராமத்தில் சுமார் 170 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெள்ளிமலையில் இருந்து பொம்மராஜபுரம் வரை சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மீட்டர் அகல சாலை வசதி மட்டுமே ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இந்த சாலையில் அவசர சிகிச்சை ஊர்திகள், இறுதி சடங்கு மற்றும் அத்தியாவசியத் தேவைக்காக மக்கள் சாலையைப் பயன்படுத்துவதில் மிகவும் நெருக்கடியாக உள்ளது. இது தொடர்பாக கடந்த 2005ஆம் ஆண்டு உயர் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பொம்மராஜபுரம் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித்தரவில்லை.
வெள்ளிமலையில் இருந்து பொம்மராஜபுரம் வரை உள்ள நான்கு கிலோமீட்டர் தூரத்தை உயர்கல்வி பயில செல்லும் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் மேகமலையில் இருந்து பொம்மராஜபுரத்திற்கு கொண்டுவரப்படும் விவசாய பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மிகுந்த சிரமத்துடன் கொண்டு செல்லப்படுகிறது. எனவே, வெள்ளிமலையில் இருந்து பொம்மராஜபுரம் வரை உள்ள நான்கு கிலோ மீட்டர் தூர சாலையின் அகலத்தை ஒரு மீட்டரில் இருந்து மூன்று மீட்டர் அகலத்திற்கு ஏற்படுத்தி தர உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அப்பகுதியில் புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது, சரியான காரணங்கள் இருந்தால் அரசிடம் முறையிடலாம் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நாளையுடன் மின் கட்டண கால அவகாசம் முடிவு!