மதுரை: இராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறுபடை கோயில்களில் ஒன்று. முருகன் தமிழுக்கான கடவுள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஏராளமான தமிழ் இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. அதனடிப்படையில் முருகன் தமிழ் கடவுளா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது முருகன் தமிழ் கடவுள் அல்ல என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 5ஆம் தேதி தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், ஜனவரி 7ஆம் தேதி முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிடக் கோரி மனு அளித்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, முருகன் எனும் பெயருக்கு அழகு, திறமை, அறிவு, இளமை என பல பொருள்கள் உள்ளன. முருகனைத் தமிழ்க் கடவுள் என்று பலரும் அழைக்கின்றனர்.
ஆனால் அதனை எவ்வாறு இதுபோல அறிவிப்பு செய்து அரசிதழில் வெளியிட முடியும்? எனக் கேள்வி எழுப்பினர். தைப்பூசத்தை போலவே கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட விழாக்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் இந்து மதத்தில் பல கடவுள்கள் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு கடவுளைப்பற்றி பாடி உள்ளது. எனவே இலக்கிய அடிப்படையில் முடிவு எடுக்க இயலாது. தமிழ்நாடு ஒரு மதசார்பற்ற மாநிலம். பல மொழி, மதம், நம்பிக்கையை கொண்ட மக்கள் வசித்து வரும் சூழலில் இதுபோல அறிவிப்பது மதசார்பற்ற தன்மையை பாதிக்கும். ஆகவே, அவ்வாறு உத்தரவிட இயலாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.