திண்டுக்கல்லைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "பள்ளபட்டி கிராமத்திலுள்ள வைகை ஆற்றுப்படுகையில் பழமையான ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே அரசு புறம்போக்கு நிலமும் அமைந்துள்ளது. இவை சித்தர்கள்நத்தம் கிராமப் பகுதியின் எல்லைக்குள் வரும். இந்தப் புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து, மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகலாக சுமார் 250க்கும் மேற்பட்ட லாரிகளில் மணலைக் கொள்ளையடிக்கின்றனர். இதனால் அப்பகுதியே பள்ளமாக காட்சியளிக்கிறது.
சட்டவிரோத மணல் கொள்ளையால், அங்குள்ள பழமையான ஆஞ்சநேயர் கோயிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, சித்தர்கள்நத்தம் பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்கவும், மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், நிலக்கோட்டை, சித்தர்கள்நத்தம் பகுதியில் சட்டவிரோத மணல் கொள்ளை நடைபெறுகிறதா என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். மேலும், நிலக்கோட்டை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் மனு தாக்கல்