கரோனா தொற்றின் 2 ஆவது அலையின் தீவிர பரவலை அடுத்து, மதுரையில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா, தற்போது மீனாட்சி அம்மன் கோயிலிலும், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலும் பக்தர்களின் அனுமதியின்றி கோயில் வளாகத்திலேயே நடைபெறுகிறது.
இந்தநிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நாளை (ஏப்.27) நடைபெற வேண்டும். ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நிகழ்வுகள் அனைத்தும் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வளாகத்திலேயே நடைபெறவுள்ளது.
இருந்தபோதிலும், பக்தர்கள் அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இன்று (ஏப்.26) வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரம் ஏவி மேம்பாலத்துக்குக் கீழே மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நாளை(ஏப்.27) காவல் துறை தரப்பில் மொட்டையடிக்க அனுமதி மறுக்கப்படும் என்பதால் இன்றே நேர்த்திக்கடன் செலுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். வைகை அணையிலிருந்து ஏப். 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதன் தண்ணீர் மதுரை வந்தடைந்தது. அந்த நீரில் பக்தர்கள் நீராடி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.