மதுரை: தவில், கரகம், தெருக்கூத்து போன்ற பாரம்பரியக் கலை வடிவங்கள் மூலமாகத் தமிழ்நாடு மக்களிடம் பல்வேறு சமூகப் பிரச்சினைகளின் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது, மதுரையிலுள்ள கூடல் கலைக்கூடம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த அமைப்பு பல நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கி, சமூகப் பொறுப்புள்ள மனிதர்களாக மாற்றியுள்ளது.
பெண் சிசுக்கொலை, நீர் சிக்கனம், மழைநீர் சேமிப்பு, பெண் முன்னேற்றம் மட்டுமன்றி, கரோனா விழிப்புணர்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியோடு இயங்கிவருகிறது, இக்கூடல் கலைக்கூடம். இக்குழுவில் 30 விழுக்காட்டினர் பாரம்பரியக் கலைஞர்களாகவும், மீதியுள்ள 70 விழுக்காட்டினர் கல்லூரி மாணவர்களாகவும் உள்ளனர்.
மாணவர்களுக்கு கலைப்பயிற்சி
இக்கலைக்கூடம் குறித்து, கலைக்கூடத்தின் நிறுவனரும் பேராசிரியருமான முனைவர் அழகு அண்ணாவி நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது, “அனைத்து வகையான விழிப்புணர்வுகளின் அடிப்படையில் கடந்த 22 ஆண்டுகளாக கூடல் கலைக்கூடம் மாணவர்களுக்கான பயிற்சி மையமாக இயங்கிவருகிறது.
தாய்-சேய் நலம், மழைநீர் சேகரிப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகளோடு இணைந்து மேற்கொண்டுவருகிறோம். தற்போது கரோனா குறித்த விழிப்பணர்வுக்காக தற்போது நாட்டுப்புற கலைப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கிவருகிறோம். கரகாட்டம், தவில், பாடல், வீதி நாடகப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன” என்றார்.
கற்றுக்கொண்டதை கற்பி
கலைகளில் ஆர்வமுள்ள மாணவர்களின் திறமையை மெருகூட்டும் களமாக கூடல் கலைக்கூடம் திகழ்கிறது. அதே நேரம் அவர்களின் மூலமாகவே இந்தச் சமூக விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இதனால் மாணவர்களும் சமூகப் பொறுப்புமிக்கவர்களாக உருவாவதற்கும் வாய்ப்பு உருவாகிறது.
தென் தமிழ்நாட்டில் மட்டும் 600 கிராமங்கள் வரை இந்தக் கலைஞர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். பயிற்சி, ஆராய்ச்சி, நிகழ்ச்சி என்னும் முப்பரிமாணத்தில் கூடல் கலைக்கூடம் இயங்குகிறது.
இது குறித்து மதுரை பசுமலையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதலாமாண்டு மாணவர் முனியசாமி கூறுகையில், “தனிப்பட்ட எங்கள் ஒவ்வொருவரின் சுயமுன்னேற்றத்தை கூடல் கலைக்கூடம் உறுதிசெய்கிறது. கற்றுக்கொள், அதனை எல்லோருக்கும் கற்பி என்பதுதான் எங்களை வழிநடத்தும் பேராசான்களின் முழக்கம்.
இங்கு நான் கற்றுக்கொண்ட கலைகள் மூலமாக நல்ல மனவலிமையைப் பெற்றுள்ளேன். பலருக்கும் பயன்படக்கூடிய வாழ்வாதாரமாக மட்டுமன்றி வாழ்வியலாகவும் கலைகள் உள்ளன என்பதை நிரூபித்தாக வேண்டும்” என்கிறார்.
மரபுக்கலை மீதான மாணவர்களின் பற்று
வகுப்பறைக் கல்வி எத்தனை முக்கியமோ அதைவிட சமூக வாசிப்பும் முக்கியம் என்பதை இந்த மாணவக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் உறுதிசெய்கிறார்கள். தாங்கள் கற்றுக்கொள்ளும் கலைகளை வாழ்வியலாக மாற்றுவதில் அவர்களுக்குள் வெளிப்படும் ஆர்வம் மிக மிக அலாதியானது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியின் நாட்டுப்புற கலைத் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியரான தவசி ஞானசேகரன் பேசுகையில், “கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் நாட்டுப்புறக் கலைகள் மீதும், நம் தமிழ் மரபுக் கலைகள் மீதும் பற்றுதல் கொண்டு கற்றுக்கொள்ள முன்வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
இதில் எந்தவித தொய்வுக்கும் இடமளிக்காமல் மென்மேலும் கற்றுக்கொண்டு சிறந்த கலை மேதைகளாகத் திகழ்வதோடு, சமூகப் பொறுப்புணர்வோடு தங்களது கலைத்திறனை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.
சமூக நீதியின் பார்வை
ஆர்வத்துடன் முன்வரும் மாணவர்களை ஆரத் தழுவி வரவேற்று, தாங்கள் கற்றுக்கொண்ட கலைகளை அவர்களுக்குக் கற்றுத்தருவதில் கலைஞர்கள் அத்தனை பேரும் ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்து வருகின்ற தலைமுறைக்கும் தமிழ் மரபுக் கலைகளைக் கொண்டுசெல்வதில் மிகுந்த முனைப்புடன் செயல்படுகின்றனர்.
கூடல் கலைக்கூடத்தில் மாணவர்களுக்கு அளித்துவரும் பயிற்சிகள் குறித்து, கலைக்கூடத்தின் பயிற்சியாளர் ஃபிரான்சிஸ் கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக வீதி நாடகப் பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்கிவருகிறேன். தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் பயிலும் மாணவர்களுக்கு வீதி நாடகம் குறித்து பயிற்சி அளித்துவருகிறேன்.
மனிதநேயத்திற்கு முரணாக இயங்கும் சனாதன சக்திகளின் நோக்கங்களை மாணவர்களுக்கு அறியத் தருதல் வேண்டும். சமூகநீதிப் பார்வையை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் சமூகத்தின் நல்லிணக்கம் மேம்பட வேண்டும்” என்றார்.
பாராட்டுக்குரிய கலைக்கூடத்தின் பணி
அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு மாகாணங்களில் நாகசுரக்கலையைப் பரவலாக்கிவரும் கொம்பு மரபிசை மையத்தைச் சேர்ந்த சிவசங்கர் சுப்பிரமணியன் இணைய வழியாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தவில் கலைஞர் கோட்டைச்சாமி, கரகக் கலைஞர் அழகேசுவரன் ஆகியோர் நேரடியாகவும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தனர்.
பொதுமக்கள் செம்மையுற வாழ்வதற்குத் தேவையான விழிப்புணர்வை கலைகளின் வழியே மேற்கொண்டுவருவதுடன், வாழ்வாதாரத்தைத் தாண்டி வாழ்வியலாக கலைகள் மாற வேண்டியும் தொடர் முயற்சி மேற்கொண்டுவரும் கூடல் கலைக்கூடத்தின் பணி பாராட்டிற்குரியது. கலைகள் கற்போம்! மனிதம் காப்போம்! என்ற இந்த மாணவர்களின் முயற்சிகள் நிச்சயமாய் தொடர்ந்து முன்செல்லும்.