மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் கடந்த 28ஆம் தேதி காவல் துறையினரால் நடைபெற்ற வாகன சோதனையில் அதே பகுதியைச் சேர்ந்த அரிச்சந்திரன் என்பவருடைய ஆட்டோவை ஆவணங்கள் இன்றி ஓட்டியதாக காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். பணமில்லாமல் மன விரக்தியடைந்து அரிச்சந்திரன் மின்மாற்றியைப் பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதில், 90 விழுக்காடு தீக்காயங்களுடன் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், அரிச்சந்திரன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து 300க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரபோஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல் துறையால் பல்வேறு வகைகளில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதை உடனடியாக அரசு தலையிட்டு தீர்க்க வேண்டும். அவர்களின் தொந்தரவு காரணமாகவே நிறைய ஆட்டோ ஓட்டுநர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்துள்ளனர். இவையெல்லாம் வெளியே தெரியாதவை” என்றார்.
இதையும் படிங்க: அண்ணாவின் 51ஆவது நினைவுதினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை