மதுரை: புகழ்பெற்ற ஆன்மீக அடையாளமாகத் திகழும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குளத்தை சுத்தப்படுத்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரையின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீகத் தலமாகவும் விளங்குகிறது வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். இது தமிழகத்தின் இராண்டாவது தெப்பக்குளம் ஆகும். இதற்கு வைகை ஆற்றில் இருந்து, பனையூர் கால்வாய் வழியாக தண்ணீர் நிரந்தரமாக நிரப்பப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக தெப்பக்குளத்தில் தண்ணீர் வற்றிய நிலையில், வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீராலும், தொடர் மழையினாலும் நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. தற்பொழுது குளம் முழுமையாக நிரம்பி காட்சியளிக்கின்றது. இந்நிலையில், தெப்பக்குளத்தில் பாசிப்படர்ந்து தண்ணீர் பச்சை நிறமாக காட்சி அளிப்பதோடு, ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து மதுரை மாநகராட்சி நிர்வாகமும், அறநிலையத் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, குளத்தை சுத்தப்படுத்தி தர வேண்டும் என் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தைப்பூசத்தன்று, இங்கு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார்..! தொட்டியை இடித்துத் தள்ள ஆட்சியர் உத்தரவு!