மத்திய ரிசர்வ் காவல் படையின் 24 துணை மருத்துவப் பணிகள் நியமனங்களுக்கான தேர்வு மையம் தமிழ்நாடு, புதுச்சேரியில் அமைக்கப்பட வேண்டுமென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.பி, சு.வெங்கடேசனின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையம் அமைக்கப்படுமென சிஆர்பிஎப் இயக்குநரகம் பதில் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, உள்துறை அமைச்சருக்கும், சிஆர்பிஎப் இயக்குநருக்கும் 10.10.2020 அன்று சு.வெங்கடேசன் எம்.பி எழுதிய கடிதத்தில், “குரூப் "பி" மற்றும் குரூப் "சி" அமைச்சுப் பணி அல்லாத (Non ministerial), பதிவிதழில் இடம் பெறாத, மோதல் முனைகளில் பணிபுரிகிற 780 அகில இந்தியப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 20.12.2020 அன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியமன அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட இல்லை
இது தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களை மிகப்பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கும். குறிப்பாக இன்றைய கரோனா சூழல், மக்களின் நகர்வுகளுக்கு இருக்கிற பிரச்னைகள் ஆகிய பின்புலத்தில் மேற்கண்ட பணிகளுக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான தடைகளாகவும் மாறும். தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்தபட்சம் ஒரு மையத்தை இவ்விரு பகுதிகளுக்கும் அறிவிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
சிஆர்பிஎப் பதில்:
"முந்தைய பணி நியமனம் மற்றும் தற்போது எதிர்பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், தேர்வு மையங்கள் பகுதி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2020- துணை மருத்துவப் பணி நியமனங்கள் தொடர்பாக வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருகிறோம். இப்பரிசீலனை முடிந்தவுடன் தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையங்கள் அறிவிக்கப்படுமென்பதைத் தெரிவிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சு. வெங்கடேசன், " திறந்த மனதோடு கூடுதல் மையங்களுக்கான கோரிக்கை பரிசீலிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. தமிழ்நாடு, புதுவைக்கு தேர்வு மையம் கிடைக்குமென்று நம்புகிறேன். அதை சிஆர்பிஎப் உறுதி செய்ய வேண்டும். விண்ணப்ப நிலையிலேயே தேர்வு மையங்கள் அறிவிக்கப்படுவது, மையங்கள் இல்லாத பகுதிகளை சார்ந்தவர்களின் முனைப்பை பாதித்திருக்க கூடுமென்பதால் புதிய மையங்களை அறிவித்து விண்ணப்ப தேதியையும் நீட்டிக்க வேண்டுமென்ற எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். கரோனா சூழலை மனதில் கொண்டு இக்கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்" என்று கூறினார்.