மதுரை செல்லூரைச் சேர்ந்த அசோக் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அதில், "எனது மனைவி விசாலாட்சி, இரண்டு வயது மகள் துர்காஸ்ரீ . இவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தல்லாகுளம் உலகத் தமிழ்ச்சங்க கட்டடத்திற்குப் பின்புறம் அமைந்துள்ள எனது மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
அப்போது உலகத் தமிழ்ச்சங்க கட்டடப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இப்பகுதியில் குடியிருப்பவர்களைக் கருத்தில்கொள்ளாமல், கட்டட வேலை பார்த்தவர்கள் மின்சார வயரை தாழ்வாக அமைத்திருந்தனர்.
இப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த எனது மகள் துர்காஸ்ரீ, மின் வயரைத் தொட்டு மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாள். சத்தம் கேட்டு அவரைக் காப்பாற்ற சென்ற எனது மனைவி விசாலாட்சி, எனது மனைவியின் மூத்த சகோதரி மகன் ராமர் என்ற 10 வயது சிறுவன் ஆகியோர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்து மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். இதில் எனது மனைவி, மகளுக்கு உடலில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று (ஆகஸ்ட் 26) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, மின்சாரம் தாக்கியதில் பாதிப்படைந்த சிறுமி துர்காஸ்ரீக்கு இழப்பீடாக ரூ 2 லட்சமும், அவரது தாயார் விசாலாட்சிக்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் நிலை என்ன?