மதுரை: மக்கள் அனைவரும் கரோனா மூன்றாம் அலையிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் மத்திய, மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “தற்போது கரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பாதிப்பை தடுக்க பல முறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க உத்தரவிடக் கோரிக்கை
இருப்பினும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தகுந்த இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அதிகளவிலான அபராதம் விதிக்க வேண்டும்.
கரோனா ஆராய்ச்சி நிலையங்களை அதிகரித்து, ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைக் கடந்த மார்ச் மாதம் விசாரித்த நீதிமன்றம், வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது.
மூன்றாவது அலையிலிருந்து தற்காத்துக் கொள்ளல்
தற்போது நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத மத்திய, மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 6) விசாரணைக்கு வந்தது.
அப்பொது பேசிய நீதிபதிகள், “ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியுடன் இருக்க வேண்டும். மேலும் கரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து அனைவரும் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சிறையில் கைதி உயிரிழப்பு: நீதிமன்றம் உத்தரவு