தமிழ்நாட்டில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி தாக்கல்செய்த பதில் மனுவில், "862 கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. நெல் கொள்முதல் நிலையங்களில் அலுவலர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைக் கண்காணிக்க ஆறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 105 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள், "முறைகேடு நடைபெறவில்லை என்றால் 105 அலுவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் அலுவலர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும்.
சமூகத்தில் லஞ்சம் என்பது புற்றுநோயை விட கொடிய நோயாக பரவிக் கொண்டிருக்கிறது. இதுபோன்று லஞ்சம் வாங்கும் அலுவலர்களுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசின் அறிக்கை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட 105 அலுவலர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், எவ்வளவு பணம் இவர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்டுள்ளது?" எனக் கேள்வி எழுப்பினர்.
அரசின் சார்பாக விரிவான பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் எதிர் மனுதாரராக வேளாண்மைத் துறைச் செயலாளர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட அரசுத் துறைகளில் லஞ்ச ஒழிப்பு குறித்து ஆய்வுசெய்து தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும் என்றனர்.
இதையும் படிங்க: வறுமையால் நேர்ந்த சோகம்: குழந்தைகளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாயும் தீக்குளிப்பு!