தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களுக்கு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளித்து கடைபிடிக்கப்பட்டு வருகிற நிலையில், கைபேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் மதுரையில் உள்ள மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் இயங்கி வரும் 100க்கும் மேற்பட்ட கடைகளில் நாள்தோறும் வாடிக்கையாளர்கள் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் அங்குள்ள ஒரு கடையில் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனக் கூறி மதுரை மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் பாலமுருகன் என்பவர் கூட்டம் அதிகமாக உள்ள மற்ற கடைகளை விடுத்து, தனது கடைக்கு மட்டும் அபராதம் விதிப்பது குறித்து கேள்வி எழுப்பியது மட்டுமின்றி இதனை தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததும் மாநகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளனர்.
குறிப்பாக மற்ற பெரிய கடைகளில் கூட்டம் மிகுந்து காணப்படுவதை கண்டுகொள்ளாமல், சிறிய கடைகளுக்கு மட்டும் அபராதம் விதிப்பது நியாயமற்றது. நாள் ஒன்றுக்கு 5 கடைகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்க உயர் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளதால், அபராதம் விதித்துள்ளதாகவும் ரசீதும் வழங்குவதில்லை எனவும்; அபராதம் கட்டவில்லை என்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கின்றனர் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
தொடர்ந்து கரோனா இரண்டாம் அலையின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சிறு வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி அலுவலர்களின் பாரபட்சமான நடைமுறை பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.