தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் நாள்தோறும் ஐந்தாயிரம் பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மதுரையில் நேற்று (அக்டோபர் 14) 75 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இருந்ததை விட கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், முழுவதுமாக குறையாமல் நாளொன்றுக்கு 100க்கும் குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்றைய நிலவரப் படி மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 61 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதனால் மொத்தமாகக் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 402ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு குறைந்ததுபோல் உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் தினமும் 10 பேர் வரை கரோனாவால் உயிரிழந்து வந்தனர். தற்போது இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் குறைய தொடங்கும் கரோனா எண்ணிக்கை பாதிப்பு