கரோனா வைரஸ் எனப்படும் 2019-nCoV காரணமாக சீனாவில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கு மருந்து தயாரிக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது தொற்று நோய் என்பதால், அனைத்து நாடுகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
இதனையடுத்து மதுரை விமான நிலையத்திலும் வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய விமானங்களின் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும், மருத்துவ குழுக்கள் எவ்வாறு செயல்படுகிறது என மாவட்ட மாநகராட்சி முதன்மை சுகாதாரத் துறை அலுவலர் பிரியாராஜ் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மாநகராட்சி முதன்மை சுகாதாரத் துறை அலுவலர் பிரியாராஜ் கூறுகையில், “சீனாவில் பரவி வரும் வைரஸ் கட்டுப்படுத்துவதற்காக சென்னை, திருச்சி, கோவை விமான நிலையத்திற்கு முன்னெச்சரிக்கை பரிசோதனை நடைபெற்றுவருகிறது. மதுரையை பொறுத்தவரையில் வெளிநாடுகளிலிருந்து நான்கு விமானங்கள் வருகின்றன. அதில் வரும் பயணிகள், ஊழியர்கள் உட்பட அனைவரையும் பரிசோதனை செய்கிறோம். இதற்காக ஆண், பெண் என இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க... 'பொதுத்தேர்வு - மாதிரி வினாத்தாளில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது!'