மதுரைச் சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்யமூர்த்தி என்பவர், "கரோனா தொற்று காலத்தில் களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகப் பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு-அரசு சாராத தன்னார்வலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உடலை முழுமையாகப் பாதுகாக்கும் வகையிலான பாதுகாப்பு ஆடைகள், முகக் கவசங்கள், உள்ளிட்டவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுநல வழக்கினை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்பிற்குள்பட்ட திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி, நாகர்கோவில், நெல்லை, தஞ்சை, மதுரை ஆகிய மாநகராட்சிகளின் ஆணையர்கள் தரப்பில் அனைத்து தூய்மைப் பணியாளர்களும் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அனைத்து மாநகராட்சி ஆணையர் சார்பாக அறிக்கையும் தாக்கல்செய்யப்பட்டது.
இந்நிலையில் நீதிபதிகள், மாநிலத்திலுள்ள அனைத்து நகராட்சிகள், பஞ்சாயத்துகளிலும் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து பணிசெய்வதை தமிழ்நாடு உள்ளாட்சித் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள், உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
தொடர்ந்து அரசுத் தரப்பில், "முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றும் காவல் துறையினர் அனைவரும் முழு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், சந்தை - சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் காவலர்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும். ஆகவே மாநிலத்தில் முன் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை வழங்கவும், அவற்றைக் காவலர்கள் பயன்படுத்துவதை அந்தந்த காவல் துறை கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.